Sunday, 19 July 2026

நாம் என்னும் பிரபஞ்சம்

  நாம் என்னும் பிரபஞ்சம்  

நாம் தனிமையில் அமர்ந்திருக்கும் போது ஏதேனும் ஒன்றைச் சிந்திப்பது மனித இயல்பு. அப்படி ஒரு தனிமை நாளில், என் நினைவில் எழுந்தவர்கள் யோகிகளும் மகான்களும் தான். சிந்தனையற்ற 'சும்மா இருக்கும்' பேரின்ப வித்தையை இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுத்திருக்கிறது? நாமும் முயல்கிறோம், ஆனால் ஏதோ ஒரு பற்று நம்மைப் பிடித்துக் கொள்கிறது.

ஒருவேளை அந்த மகான்கள் சிந்தனை செய்தால், யாரைப் பற்றிச் சிந்திப்பார்கள்? இறைவனைப் பற்றிச் சிந்திக்கிறார்கள் எனில், இறைவன் நம்மோடு வாழ்கிறான் என்றுதானே அர்த்தம்? ஏனெனில், இல்லாத ஒன்றை எண்ணிச் சிந்திப்பது இயலாத ஒன்று!

நமது இந்து தர்மம் ஆதியும் அந்தமும் அற்றது. அது நமக்கு இரண்டு குழந்தைகளை வழங்கி இருக்கிறது—ஒன்று பக்தி மார்க்கம், மற்றொன்று ஞான மார்க்கம். வருங்கால சந்ததி நன்னெறியோடு வாழவும், தாம் பெற்ற நன்மைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவுமே இவை வகுக்கப்பட்டன. இந்த தர்மக் கடமையிலிருந்து நாம் வழுக்கும் போது, நம்மை நல்வழிப்படுத்த மகான்களின் வருகை அவசியமாகிறது.

தமிழ் எழுத்துக்களைப் படைக்கும் போதே இறைவன் திட்டமிட்டுத் தான் படைத்திருப்பான் போலும்! உயிர் எழுத்துக்களின் வரிசையில் முதலில் குறிலும், பிறகு நெடிலும் மாறி மாறி அமைவதன் நோக்கம், "இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை" என்பதை நமக்கு உணர்த்தவே ஆகும்.

ஒரு நதியானது மலை, மேடு, பள்ளங்களைக் கடந்து, அருவியாய் விழுந்து, பின்னரே கடலில் கலக்கிறது. அதுபோல இறைவனை அடைய நாம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு நாம் ஆராய வேண்டியது கடவுளைப் பற்றி அல்ல; இன்ப துன்பங்களில் இருந்து நாம் அடையும் படிப்பினைகளையும், அதனால் விளையும் நன்மைகளையும் பற்றியே ஆகும்.

நமக்கு ஏற்படும் துன்பங்கள் ஒவ்வொன்றும் நமக்கு ஒரு புது அனுபவமாகவே தோன்றும். அந்தத் துன்பங்களைத் தீர்க்க வழி தெரியாமல் நாம் தவிக்கும் போதுதான் இறைவனை நினைக்கிறோம். இறைவன் நேரடியாக இறங்கி வருவதில்லை; மாறாக, தன் தூதர்களான மகான்களை அனுப்புகிறான். ரமண மகரிஷி, காஞ்சி மகா பெரியவர், வள்ளலார் போன்றோர் இதற்குச் சிறந்த உதாரணங்கள்.

துன்பம் நேர்கையில், அதற்கான விளக்கத்தையும் ஞானத்தையும் மனிதன் தேடுகிறான். அந்த ஞானத்தின் வழியே 'தன்னை அறிய' முற்படுகிறான். அப்படித் தன்னை அறியும் ஞானத்தைத் தேடுபவர்கள் மகா பெரியவரை நாடிச் செல்கின்றனர். காரணம், பாமரனும் ஞானமடையும் வண்ணம் அமைந்த அவரின் எளிய உரைகளே!

நம் பிறவிப் பயனில் ஒட்டிக்கொண்டிருக்கும் கர்ம வினைகள் அகல மகான்களின் அனுக்கிரகமும் வழிகாட்டுதலும் மிக அவசியம்.

ஆகவே... மகான்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என அனைவரும் நம்மைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இப்போது அவர்கள் சிந்தனையில் நிறைந்திருப்பது "நாம்" என்னும் பிரபஞ்சமே!

ஆசிரியர்



1 comment: