Tuesday, 21 July 2026

கரும்பு கசப்பது வாய் குற்றமே

 கரும்பு கசப்பது வாய் குற்றமே

போக வாழ்க்கையை  நன்றாக வாழ உண்டான மார்க்கம் கர்ம மார்க்கமே ஆகும்.  அதை விடுத்து பரமாத்மாவோடு இணைவது ஞானமார்க்கம் ஆகும் .  ஒரு துளியில் ஒரு நதி உண்டாக்குவதில்லை ஆனால் நதியின்  ஒவ்வொரு துளியிலும் ஒரு மழைத்துளி உண்டு அது போல கர்ம மார்க்கம் என்கிற ஒன்றில் நாம் வாழும் புண்ணிய வாழ்வு நிறைந்து ஞானமார்க்கமாக வளர்கிறது 

கோயிலுக்குள் கர்ப்ப கிரகம் மட்டும் இருப்பதில்லை அதைச் சுற்றி நிறைய அனுக்கிரகம்  தரும் துணைக் கடவுள்களும் இருக்கத்தான் செய்கின்றன ஏன் இந்த வித்தியாசம் 

கல்விக்கு ஒரு கடவுள்,  ஞானத்திற்கு ஒரு கடவுள் ,  உபதேசம் செய்ய ஒரு கடவுள் என ஏன் வகுத்திருக்க வேண்டும் ? ஒன்றை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஒரு வினையை தொடங்குவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது என்ன என்ற ஆயத்தம் தேவை அதுமட்டுமல்லாமல் மனது எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் அதனால் தான் கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் நம் கருணாமூர்த்தியான கணபதியை வணங்குகிறோம் ஏனெனில் அவர் எப்போதும் ஆனந்தமயமானவர் என்று நமது எல்லோருக்கும் நன்றாக தெரியும் 

நாம் அடுத்த நிலைக்கு செல்ல கணபதியை வணங்குவது அவசியம் என்பது இதிலிருந்து புரியும் . அவர் மன சாந்தியுடன் புன்னகையுடனும் எப்போதும் அமர்ந்து இருப்பார். நீங்கள் புல்லை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார். 

அடுத்தது ஒவ்வொரு தெய்வங்களையும் முருகன், பைரவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை,  என அனைத்தும் இருக்கும் காரணம் இவை அனைத்தும் நம்முடைய எண்ணங்கள்.

 முன்னோர்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் சண்டிகேஸ்வரருக்கு முன் நிற்கும் போது நாம் அவரிடம் எனக்கு எந்த நினைவும் இல்லை ஈசனைத் தவிர,  என்று வேண்ட வேண்டும் என்பார்கள் .  காரணம் மனம் ஒன்றுபட்டு இறைவனோடு கலப்பதற்கு உண்டாக்கிய நிலையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும்

 தென்முகம் கொண்ட தக்ஷிணாமூர்த்தி என்பவர் ஞானத்தின் வடிவானவர், அவரை வணங்கும் போது  இறைவா நான் எல்லா படிகளையும் கடந்து வந்து விட்டேன் தற்போது ஞானமாகிய உன்னிடத்தில்  வந்து விட்டேன் என்னை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்வது உன் பொறுப்பு  இந்த இயற்கையின் பரமபத விளையாட்டில் அடுத்த படிநிலை என்ன என்று அறியாமல் நகர்ந்து கொண்டிருக்கிறேன். இவை அனைத்தும் முடிந்தவுடன் ஆனந்த மயமான இறைவன் கர்ப்பகிரகத்தில் உள்ளே அமைதியாய் இருப்பார்.  எந்த சலனமும் இன்றி  விக்ரகமாக அங்கே நமக்கு காட்சி அளிப்பார்

 இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது நாம் அனைத்து படிநிலைகளையும் கடந்து அமைதி என்கிற ரூபத்திற்கு வர வேண்டும் என்பதே .  மனம் ஒன்றி அமைதி ரூபத்திற்குள் சென்று விட்டால் வாழ்வின் வினை பிரிந்து , கர்ம பலனை விடுத்து , ஞான மார்க்கத்தில்  உள்நுழைந்து விடுகிறோம் வெளிச்சுவற்றில் இருப்பவை அனைத்தும் நம்மை  ஞான மார்க்கத்திற்கு இட்டுச் செல்லும் ஓர் கருவியே ஆகும். 

சரி, இந்த ஞானம் மார்க்கத்தை அடைந்த பிறகு என்ன நடக்கும்?  ஒன்றுமே நடக்காது அத்தனையும் செயலற்று நிற்கும்.  இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் புரிந்து விடும் .  இதனால் தான் நமது முன்னோர்கள் கோவிலை குறிப்பிட்ட எண்ணிக்கையில் சுற்றிவரச் சொன்னார்கள் ஏனெனில் அவர்கள் பட்ட அனுபவத்தின் வாயிலாக நாம் நம் வாழ்வை சீரமைத்துக்  கொள்ள வேண்டும் என்பதாலேயே .  நம் இந்து தர்மம் வாழ்க்கையை வெறுத்து வாழ சொல்லவில்லை மாறாக வாழ்க்கையை இன்புற்று அமைக்க வேண்டுகிறது.  அந்த இன்பம் சில கோட்பாடுகளையும் நெறிமுறைகளையும் பகுத்துக் கொடுத்திருக்கிறது அவையே தர்ம சிந்தனைகள் என்றும் , தர்ம சிந்தனையை கடைபிடிக்கும் வழிமுறையை சனாதன தர்மம் என்றும்,  நாம் கூறி வருகிறோம் 

சனாதன தர்மம் என்கிற ஒன்று இல்லையேல் இன்பம் என்கிற கரும்பின் சாறு கசந்தே இருக்கும் இப்பொழுது நீங்கள் கர்ம மார்க்கத்தின் வழியை வந்தடையுங்கள்  கர்ம பலனை வென்று ஞானம் மார்க்கத்திற்கு வந்து சேருங்கள். ஞானமார்க்கம் ஒரு நிறைவான வழியை நமக்கு காட்டும் 

கரும்பு கசப்பது வாய் குற்றமே


No comments:

Post a Comment