Tuesday, 21 July 2026

இருளில் இருந்து விடைபெறும்

 இருளில் இருந்து விடைபெறும் 

இங்கு மிகப்பெரிய வியப்பு என்னவெனில் நாம் இந்த உலகத்தில் பிறப்பெடுக்க காரணம் என்ன என்பதை நாம் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதுதான். இந்த உலகில் நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எது தேவை ? என்பதையும் உணர்ந்து கொள்ளவில்லை. நிறைய பணம் , காசு இருந்தால் நிம்மதியை அடைந்து விடலாம் என கருதுகின்றனர். 

அதுமட்டுமல்ல இன்னொருவனை விட நம்மிடம் அதிகம் இருக்கிறது என்ற எண்ணம் வளர்ந்து கொண்டே வருகிறது . அதற்காக நமது எண்ணம் நம்மை வேறு வேறு பாதையில் திருப்புகிறது. எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று மனம் சொல்லுமா ? என்ன ? என்னைவிட என் தம்பி தங்கைகள் வங்கி இருப்பில் செழித்தவர்கள் என்றும் , அவர்களை விட நான் ஒரு படி மேலே இருக்க வேண்டும் எண்ணமும் நம் நிம்மதியை கெடுத்து விடுகின்றன. 

யானைக்கு ஒரு கவளம் சோறு எனில் எறும்புக்கு அது சிந்தும் ஒற்றை பருக்கையே போதுமானது உயிருக்கு ஏற்றபடி இறைவன் கொடுத்தனுப்புகிறார். 

நான் ஒரு கதை படித்திருக்கிறேன் . ஒரு துணி வெளுப்பவர் வீட்டில் கழுதை ஒன்று இருந்தது. தினமும் ஆற்றுக்கு அழைத்துச் செல்வார்.  அங்குள்ள புல் தரையில் கழுதையை கட்டி விட்டு துணி துவைக்க செல்வார். கழுதையானது அங்கு வெட்டுக்கிளியைக் கண்டது. வெட்டுக்கிளி அழகாக பாடும் . இதை கழுதை கண்டு அதனிடம் கேட்டது உனக்கு இந்த குரல் எப்படி வந்தது என்று ? வெட்டுக்கிளி சொன்னது தினமும் நான் பனித்துளிகளை உண்பேன். அதனாலே எனக்கு இந்த குரல் வந்தது என்னும் போது , தினமும் கழுத்தையும் பனித்துளியை உண்ண  ஆரம்பித்தது. நாளடைவில் உடல் மெலிந்து வற்றி இறந்தும் போனது. 

இதே போல் தான் எத்தனையோ மானிடர்கள் “ எனக்கு வேண்டும் , எனக்கு வேண்டும் “ என்று ஆசைப்பட்டு முதுமையில் அவற்றை அனுபவிக்க முடியாமல் நோயில் படுத்தவர்களை நாம் காண்கிறோம். அறிவு என்பது நம்மை சீர் செய்யும் கருவி.  

நமக்கு நிலையான நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிற இடம் கோவில் தான். அந்த கோவில் பிரசாதம் தரும் போது நமக்கு கிடைக்கிறது கிடைக்கட்டும் என்று இருக்கிறோமா ? இல்லையே ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு சண்டையிட்டு முதலில் நான் தான் பெற வேண்டும் என்று விரும்புகிறோமே. அப்புறம் எப்படி நிம்மதி கிடைக்கும் ? என்று காஞ்சி மஹா பெரியவா சொன்னதை இந்து தர்மம் என்னும் நூலில் ( சோ அவர்கள் எழுதியது ) காண்கிறோம் இங்கு நாம் ஞானத்தை தேடி தரிசனத்துக்காக சோ அவர்கள் மூலம் மஹா பெரியவாவின் அருளைப் பெறுகிறோம். 

குரு என்பவர் எதன் மூலமும் நமக்கு ஞானத்தை விதைக்க முடியும். இங்கு குரு ஒரு புத்தகத்தின் மூலம் ஞானத்தை விதைக்கிறார். 

இந்த உலகம் நமக்கானது . ஆத்ம , ஆனந்த , அனுபவம் எல்லாம் சிவமயமானது என்ற நிலைக்கு நாம் வரும் போது போட்டி பொறாமை அகன்று உலகம் அந்த இருளிலிருந்து அப்படியே விடை பெறும் 


No comments:

Post a Comment